சித்தராமையா மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை: மூத்த தலைவர்கள் முனியப்பா, தேஷ் பாண்டே உறுதி
சித்தராமையா மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை: மூத்த தலைவர்கள் முனியப்பா, தேஷ் பாண்டே உறுதி
ADDED : பிப் 05, 2025 09:43 PM

பெலகாவி; ''முதல்வர் சித்தராமையாவை மாற்றுவது என்ற பேச்சுக்கு இடம் இல்லை. அவரே பதவியில் நீடிப்பார்,'' என, உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:
மாநிலத்தில் முதல்வர் மாற்றம் என்பது குறித்து, ஊடகங்களில் மட்டுமே சர்ச்சை நடக்கிறது. எந்த காரணத்தை கொண்டும், முதல்வர் சித்தராமையாவை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
முதல்வர் சித்தராமையா, மாநிலத்தில் நல்லாட்சி நடத்துகிறார். வாக்குறுதி திட்டங்களும், சிறப்பாக செயல்படுகின்றன. விரைவில் பட்ஜெட்டும் தாக்கல் செய்ய உள்ளார். துணை முதல்வர் சிவகுமார், அடுத்த முதல்வர் என, தொண்டர்கள் கோஷமிட்ட விஷயம், என் கவனத்துக்கு வரவில்லை.
சிவகுமார் மாநில தலைவராக, துணை முதல்வராக பணியாற்றுகிறார். முதல்வர் மாற்றம் உட்பட, முக்கியமான விஷயங்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
முதல்வரை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், காங்கிரஸ் மேலிடம் சரியான முடிவை எடுக்கும். ஆனால் தற்போதைக்கு இத்தகைய சூழ்நிலை ஏற்படவில்லை.
சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்று, காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து, முதல்வர் மாற்றம் குறித்து வலியுறுத்துவது பற்றி, எனக்கு தெரியாது.
கரும்பு விவசாயிகளுக்கு எடையில் மோசடி ஏற்படுவதை தடுக்க, சர்க்கரை ஆலைகளில் ஏ.பி.எம்.சி., மூலமாக, எடை இயந்திரங்கள் பொருத்தப்படும். இதற்காக முதல்வர் நிதி வழங்கியுள்ளார். விரைவில் பணிகள் துவங்கப்படும். எடையில் மோசடி செய்வோருக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குழப்பம் வேண்டாம்
காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
எங்கள் கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒற்றுமையாக சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால், எங்களுக்குள் பிரச்னை இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது.
சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அப்படி கூறுவதால் சிவகுமாரால் என்ன செய்ய முடியும்; கட்சி மேலிடத்தால் என்ன செய்ய முடியும்.
முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றும் எண்ணம் கட்சி மேலிடத்திடம் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டங்களில் இதுபற்றி யாரும் விவாதிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு எடுக்க வேண்டும்.
சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்யும்போது, அவர் இத்தனை ஆண்டுகள் தான் பதவியில் இருப்பார் என்று எதுவும் கூறவில்லை. அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதில் அனைவரும் உடன்படுகின்றனர்.
ஊடகங்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். சித்தராமையாவும், சிவகுமாரும் அன்பு, நம்பிக்கையின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.