கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை: சொல்கிறார் அடார் பூனவல்லா
கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை: சொல்கிறார் அடார் பூனவல்லா
ADDED : ஜன 21, 2025 10:20 PM

புதுடில்லி: கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை. ஆனால் வேலையின் தரம் மிகவும் முக்கியம் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா கூறினார்.
டாவோஸிஸ் நடந்த உலகப்பொருளாதார மன்ற கூட்டத்தில் பூனவல்லா கலந்து கொண்டார். வாரத்திற்கு 70 மணி நேர வேலை குறித்த தற்போதைய விவாதம் குறித்து தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது:
ஒரு மனிதன் 8 அல்லது 9 மணி நேரத்திற்கு மேல் சிறப்பான உற்பத்தி திறனை வெளிப்படுத்த முடியாது. சில நேரங்களில் நீங்கள் அந்த மணி நேரங்களைச் செலவிட வேண்டியிருக்கும். பரவாயில்லை. நானும் அதைச் செய்கிறேன். எனது ஊழியர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அதை தினமும் செய்ய முடியாது.
நான் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் வேலை செய்கிறேன். சில சமயங்களில் தேவைப்பட்டால் வார இறுதி நாட்களிலும் வேலை செய்வேன்.
சில நாட்களில் வேறு ஏதாவது செய்யலாம். ஆனால், அது எல்லாம் அந்த நாளைப் பொறுத்தது.
சூழ்நிலை தேவைப்படும்போது கடினமான செயலில் ஈடுபடுவது அவசியம்.
எனக்கு 16 மணிநேர வேலை நேரம் இருக்கலாம். கோவிட் காலத்தில், நான் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். ஆகவே அனைத்தும் நீங்கள் இருக்கும் நிலையைப் பொறுத்தது. நீங்கள், உங்கள் தொழிலை உருவாக்கும் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்.
கடின உழைப்புக்கு மாற்றாக எதுவும் இல்லை. ஆனால் வேலையின் தரம், அவற்றின் நோக்கத்திற்கு தகுந்தபடி வேலை செய்வது முக்கியம்.
இவ்வாறு அடார் பூனவல்லா கூறினார்.