எரிமலை வெடிப்பு பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை; மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திட்டவட்டம்
எரிமலை வெடிப்பு பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை; மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திட்டவட்டம்
ADDED : நவ 26, 2025 07:42 PM

புதுடில்லி: எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்புகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் அதைச் செய்துள்ளோம். மேலும் விமான நிறுவனங்களுடனும், விமான நிலையங்களுடனும் தொடர்பு கொண்டு வருகிறோம். கவலைப்பட ஒன்றுமில்லை.
நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். இன்று விமானங்களின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் விமான நிறுவனங்கள் வருவதை ஊக்குவிக்க விரும்புகிறேன்.எங்களிடம் ஏற்கனவே 850 வணிக விமானங்கள் உள்ளன. மேலும் 1700 ஆர்டர்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. 2047ம் ஆண்டுக்குள் விமானங்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயரும். இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை, வட மாநிலங்களின் வான்பரப்பை சூழ்ந்ததால், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்றிரவு 10.30 மணிக்கு தான் சாம்பல் புகை, இந்தியாவை விட்டு கடந்ததாக வானிலை மையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

