தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பற்றாக்குறை!

பற்றாக்குறை!

பற்றாக்குறை!


ADDED : செப் 24, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காவிரியில் தமிழகத்திற்கு 20 டி.எம்.சி., நீர்... ஒருவாரத்தில் பதில் தர கர்நாடகாவுக்கு உத்தரவு

–சிறப்பு நிருபர்–

காவிரியில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள 20 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்துவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிதாக மனுத் தாக்கல் செய்தது. அதில், ‘மழை குறைந்த ஆண்டில், உரிய நீர் திறக்கப்படாததால், பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அக்ஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘‘தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’’ என்றார்.

நீதிபதிகள், ‘எவ்வளவு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’ என வினவினர்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் முன்வைத்த வாதம்:

எங்கள் கணக்குப்படி தமிழகத்திற்கு 20 டி.எம்.சி., நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு உரிய நேரத்தில் காவிரியில் நீரை திறக்காததால், தமிழகத்தில் முன்கார் சாகுபடி ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டது. விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கான பங்கு கிடைக்கும். தற்போது தமிழகத்தில் கடுமையான நீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தச் சூழலில் தான் காவிரியில் உரிய நீரை திறந்துவிடும்படி கோரிக்கை வைக்கிறோம்.

ஆனால், இந்த நியாயமான கோரிக்கையை கூட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிசீலிப்பதே இல்லை. பற்றாக்குறை அளவான 20 டி.எம்.சி., நீரை பெற்று தருவதற்கு கூட, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பது இல்லை.

கடந்த ஜூன் மாதம் கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு தேக்கப்பட்டிருந்தது. எனினும், அம்மாநில அரசு குளங்கள் மற்றும் தடுப்பணைகளுக்கு 19 டி.எம்.சி., அளவுக்கு நீரை மடைமாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு உரிய பங்கீட்டை குறைக்க பார்க்கிறது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

தமிழக அரசின் இந்த வாதத்திற்கு கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடுகையில், ‘‘கர்நாடகாவில் மழை பொழிவு குறைவாக இருந்ததால், பல மாவட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர, கடுமையான நீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மழை குறையும் ஆண்டுகளில் வழக்கமாக ஏற்படும் சிக்கலே தற்போது நிலவுகிறது.

‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு தவறாமல் அமல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகம் தற்போது கோரும் கூடுதல் நீரை திறந்துவிட முடியாத சூழல் நிலவுகிறது,’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நீர் பற்றாக்குறை குறித்து தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. அது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய முடிவு எடுக்க வேண்டும். 20 டி.எம்.சி., நீர் பற்றாக்குறை குறித்து கர்நாடக அரசு விரிவான பதில் மனுவை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் எந்தவொரு தனிநபரோ அல்லது தனியார் அமைப்போ தாக்கல் செய்யும் இடையீட்டு மனுக்களை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாது.

இவ்வாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்., 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த செப்., 8ல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. அதன்படி, தமிழகத்துக்கு, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 6,000 கனஅடி நீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுப்படி கர்நாடகா நீரை திறந்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் நிலவரத்தை ஆய்வு செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

‘சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்!’ தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்ற உத்தரவு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தண்ணீர் இருந்தால், நாங்கள் திறந்து விடுவோம். ஆனால், எங்களுக்கு வரவேண்டிய நீர்வரத்து நின்று விட்டது; மழையும் நின்று விட்டது. அணைகளை ஆய்வு செய்து, நீர்ப்பாசன துறை அமைச்சருடன் ஆலோசித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பேன். சிவகுமார் கர்நாடக முதல்வர், காங்.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us