''அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்'': நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார் கெஜ்ரிவால்
''அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்'': நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார் கெஜ்ரிவால்
ADDED : பிப் 16, 2024 05:00 PM

புதுடில்லி: டில்லியில் ஆம்ஆத்மி ஆட்சியை பா.ஜ., கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைத்தார். நாளை (பிப்.,17) தனது ஆட்சி மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கோரியுள்ளார்.
டில்லியில் ஆம்ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் புறக்கணித்த கெஜ்ரிவாலுக்கு, 6வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டது. வரும் 19ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், சட்டசபையில் தனது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பை கோரியுள்ளார் கெஜ்ரிவால். சட்டசபையில் அவர் பேசுகையில், ''மற்ற மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்படுவதையும், பொய் வழக்குகள் போட்டு அரசாங்கங்கள் கவிழ்வதையும் நாம் பார்க்கிறோம். டில்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.
டில்லி அரசைக் கவிழ்க்க நினைக்கிறார்கள். டில்லி தேர்தலில் அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எங்கள் எம்எல்ஏ.,க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு காட்டவே நான் நம்பிக்கைத் தீர்மானத்தை முன்வைக்கிறேன்'' என்றார். இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை (பிப்.,17) சட்டசபையில் நடைபெற உள்ளது.