ADDED : பிப் 05, 2025 02:08 AM

பெங்களூரு :
பெங்களூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, மஹாராஷ்டிரா மாநில திருடன், தனது கோல்கட்டா காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளது தெரியவந்தது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த பஞ்சாக் ஷரி சாமி, 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
181 கிராம் தங்கம்
இவரிடம் இருந்து 181 கிராம் தங்க கட்டிகள், 333 கிராம் வெள்ளி பொருட்கள், தங்கத்தை உருக்க பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பஞ்சாக் ஷரி சாமிக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். சோலாப்பூரில் 400 சதுர அடி வீட்டில் தான் அவரது தாய், மனைவி, குழந்தை வசிக்கின்றனர். இந்த வீட்டின் மீதான கடனை செலுத்தாததால், வீடு தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2003ல் மைனராக இருந்தபோதே, பஞ்சாக் ஷரி சாமி திருட ஆரம்பித்தார். 2009ல் இருந்து தொழில் முறை திருடனாக மாறினார்.
பல்வேறு வீடுகளில் திருடிய நகை, வெள்ளி பொருட்களை விற்று கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு நடிகைக்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நடிகைக்காக கோடி கணக்கில் செலவழித்துள்ளார். 2016ல் கோல்கட்டாவை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
180 வழக்குகள்
காதலிக்காக கோல்கட்டாவில் 3 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா கட்டி கொடுத்துள்ளார். காதலியின் பிறந்த நாளுக்கு 22 லட்சம் ரூபாய்க்கு பரிசும் வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த 2016ல் திருட்டு வழக்கில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சபர்மதி சிறையில் இருந்தவர், 2022ல் வெளியில் வந்து மீண்டும் திருட ஆரம்பித்தார்.
மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவர் மீது 180 வழக்குகள் உள்ளன.
திருடப்படும் தங்க நகைகளை உருக்கி விற்பனை செய்துள்ளார். கராத்தேயில் கருப்பு பெல்ட்டும் வாங்கி உள்ளார். அவரது காதலியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.