UPDATED : ஜூலை 23, 2026 11:24 PM
ADDED : ஜூலை 23, 2026 10:44 PM
டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை உற்று நோக்கி வரும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறியதாவது:
மத்திய அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், 'நீட்' வினாத்தாள் கசிவு அல்லது பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா பற்றியது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. இந்த சதுரங்க ஆட்டம் இன்னும் ஆழமானது; நேரடியாக, லடாக் நிலப்பரப்பை இலக்காக கொண்டது.
கடந்த பிப்ரவரியில், ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, அமெரிக்கா தலைமையிலான, 'பாக்ஸ் சிலிக்கா' கூட்டணியில் நம் நாடும் இணைந்தது. உலகளாவிய சிலிக்கான், செமி கண்டக்டர் மற்றும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு துறையில், சீனாவின் முழுமையான ஏகபோக ஆதிக்கத்தை உடைப்பதே இந்த கூட்டணியின் நோக்கம். இந்த ஏ.ஐ., புரட்சிக்கு வலுசேர்க்க, உலகிற்கு அதிகளவில் லித்தியம் தேவைப்படுகிறது.
ஜம்மு- - காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் பெரிய அளவில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், நம் நாடு மிகப்பெரிய லாபத்தை பெற்றுள்ளது. இந்த சூழலில் தான், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக்கை அரசியலமைப்பு ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி வருகிறார்.
இது, மத்திய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்களை உள்ளூர் அமைப்புகள் முறியடிக்க முழுமையான அதிகாரத்தை வழங்கும். இந்த அதிகாரம் வழங்கப்பட்டால், உள்ளூர் அமைப்புகள் லித்தியம் சுரங்கப் பணிகளை முழுமையாக முடக்க முடியும். இது, நாட்டின் உலகளாவிய ஏ.ஐ., இலக்குகளை உடனடியாக பலவீனப்படுத்தும். அப்படி நடந்தால், நம் அண்டை நாடான சீனாவுக்கு தான் லாபம்.
சோனம் வாங்சுக், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், சீன கம்யூ., கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனர். தங்களின் சுயநலத்துக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர். இவர்களை நாம் ஆதரிப்பது அருவருப்பானது.
நாடு முழுதும் திடீரென வெடித்துள்ள போராட்டங்கள் இயற்கையானவை அல்ல. அவை நாட்டின் எழுச்சியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஆழமான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது, செமி கண்டக்டர், விண்வெளி மற்றும் ராணுவ வளர்ச்சிகளை நாசப்படுத்துவது, 'கிரேட் நிக்கோபார்' திட்டத்தை நிறுத்துவது, வெளிநாட்டு நன்கொடை பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம்.
ஒவ்வொன்றும் தனித்தனி போராட்டம் போல் தோன்றும். ஆனால், இதற்கு பின்னால் இருப்பவர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை துாண்டி விடுகின்றனர். எனவே, நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இறுதி நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுவதற்கு முன்னரே, சதித்திட்டத்தை நாம் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்
