இதுவே கடைசி: 5ம் முறையாக டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மம்தா!
இதுவே கடைசி: 5ம் முறையாக டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மம்தா!
ADDED : செப் 16, 2024 01:06 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள, அம்மாநில அரசு இதுவே கடைசி முயற்சி எனக்கூறியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.,09 ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்தது. பாதிக்கப்பட்ட டாக்டருக்கு நீதி கேட்டு அம்மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மம்தா நேரடியாக வர வேண்டும். டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் நேரடியாக பங்கேற்பார் என அறிவித்த மாநில அரசு, நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது என அறிவித்தது. இதனால், இழுபறி ஏற்பட்ட நிலையில், அவர்களை நேரில் சந்தித்து மம்தா பேசினார். அப்போதும் முடிவு ஏற்படாததால் டாக்டர்களின் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், போராட்டக்குழுவினருக்கு, தலைமை செயலாளர் மனோஜ் பான்ட் அனுப்பிய இமெயிலில் கூறியுள்ளதாவது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி டாக்டர்கள் தங்களது பணியை துவக்க வேண்டும். முதல்வருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பது இது 5வது முறை மற்றும் கடைசியும் ஆகும். இதற்கு முன்பு நாம் பேசியபடி, முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது வீடியோ பதிவு செய்யப்படாது. நேரடி ஒளிபரப்பும் செய்ய முடியாது. இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

