'ஹிந்துக்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை' ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேச்சு
'ஹிந்துக்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை' ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேச்சு
ADDED : நவ 23, 2025 02:41 AM

இம்பால்: “ஹிந்துக்கள் இல்லாமல் இந்த உலகம் இல்லை,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இன கலவரங்கள் தணிந்த நிலையில், முதல் முறையாக அம்மாநிலத்திற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், தலைநகர் இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அனைத்து விதமான இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து விட்டன. கிரீஸ் நாட்டின் யுனான், எகிப்தின் மிர் மற்றும் ரோம் நாட்டின் ரோமா போன்ற நாகரிகங்கள் இந்த பூமியை விட்டே மறைந்து விட்டன.
ஆனால், நம் ஹிந்து நாகரிகம் தொன்றுதொட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.
பாரதம் என்பது ஒரு அழியாத நாகரிகத்தின் பெயர். நம் சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். எனவே தான், உலகின் பல மூத்த நாகரிகங்கள் அழிந்தாலும், நம் ஹிந்து நாகரிகமும், சமூகமும் இந்த பூமியில் நிலைத்து நிற்கிறது. ஹிந்துக்கள் இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உலகமும் இல்லாமல் போய்விடும்.
பாரதத்தில் இருப்பவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் தான். தற்போது முஸ்லிம்களாக, கிறிஸ்துவர்களாக இருப்பவர்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் ஹிந்துக்களாக இருந்தவர்கள். அவர்களது மூதாதையர் அனை வரும் ஹிந்துக்கள் தான்.
தேசத்தை கட்டமைக்க முதல் தேவை வலிமை; அதாவது பொருளாதார திறன். அந்த பொருளாதாரம், தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். நாம் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.
குடும்ப சண்டை, குடும்பத்திற்குள்ளாகவே பேசி தீர்க்கப்பட வேண்டும். அந்த பேச்சு ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, வீண் வாதத்தை வளர்ப்பதாக இருக்கக் கூடாது.
ஒரே நிமிடத்தில் ஒரு பொருளை அழித்துவிட முடியும். ஆனால், அதை கட்டமைக்க பல ஆண்டுகள் ஆகும். அதிலும், யாரையும் புண்படுத்தாமல் கட்டமைப்பது என்பது அதிக காலம் எடுக்கும். அமைதியை ஏற்படுத்த வேண்டுமெனில் பொறுமை, கூட்டுப்பணி, ஒழுக்கம் ஆகியவை மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.

