ADDED : நவ 09, 2024 02:08 AM
சபரிமலை:சபரி மலையில், கடந்தாண்டு மண்டல மகர விளக்கு கால சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, 24 முதல் 48 மணி நேரம் வரை பக்தர்கள் காடுகளில் சிக்கி தவித்தனர்.
இதனால் இந்த ஆண்டு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக, பக்தர்களுக்கான பல வழிகாட்டு நெறிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட நெறிமுறை:
முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நாளில் சபரிமலை வர வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் பயணத்திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் உடனடியாக ஆன்லைனில் முன்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
இதனால், அந்த இடங்கள் பிற பக்தர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், ஸ்பாட் புக்கிங்கில் பதிவு செய்பவர்கள் 12 மணி நேரத்துக்குள் தங்கள் தரிசனத்தை முடிக்க வேண்டும்.
இவ்வாறு தேவசம் போர்டு அறிவித்துள்ளது.