கட்சிக்கு உதவாதவர்கள் ஓய்வு பெறுங்கள்; காங்கிரஸ் தலைவர் கார்கே காரசாரம்
கட்சிக்கு உதவாதவர்கள் ஓய்வு பெறுங்கள்; காங்கிரஸ் தலைவர் கார்கே காரசாரம்
ADDED : ஏப் 10, 2025 12:58 AM

ஆமதாபாத்: ''கட்சிக்கு உதவாத நபர்கள் தயவு செய்து ஓய்வு பெறுங்கள். அதே போல், கட்சி பொறுப்புகளை நிறைவேற்றாதவர்களும் கட்சியில் இருந்து விலகுங்கள்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில், காங்., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சி பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெளிப்படைத்தன்மை
கூட்டத்தில் கார்கே பேசியதாவது:
கட்சியில் மாவட்ட தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களது நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் பாரபட்சமின்றி நடக்கும்.
நியமிக்கப்பட்ட ஓராண்டுக்குள், சிறந்த தொண்டர்களை சேர்த்து 'பூத்' கமிட்டி, மண்டல கமிட்டியை மாவட்ட தலைவர் உருவாக்க வேண்டும்.
இதில் எந்த சார்பும் இருக்கக்கூடாது. இனி, தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது, மாவட்ட தலைவர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்துள்ளோம்.
கட்சிக்கு உதவாத நபர்கள் தயவு செய்து ஓய்வு பெறுங்கள்.
அதேபோல், கட்சி பொறுப்புகளை நிறைவேற்றாதவர்களும் ஓய்வு பெற வேண்டும்.
வெற்றி பெறுவோம்
நாம் மீண்டும் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். இந்த இரண்டாவது சுதந்திரப் போரில், ஒரே வித்தியாசம் என்னவென்றால், அப்போது வெளிநாட்டினர் அநீதி, வறுமை, சமத்துவமின்மை, வகுப்புவாதத்தை ஊக்குவித்தனர்.
தற்போது அவற்றை, நம் சொந்த அரசு செய்கிறது. இந்த போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.