ஹிந்துக்களை பாதுகாத்தால்...: மே.வங்கத்தில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு மிரட்டல்
ஹிந்துக்களை பாதுகாத்தால்...: மே.வங்கத்தில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு மிரட்டல்
ADDED : ஏப் 30, 2025 03:56 PM

கோல்கட்டா: ஹிந்துக்களை பாதுகாத்தால், கொலை செய்வோம் என காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிபவருக்கு சொந்தமான மே.வங்கத்தில் உள்ள வீட்டில் மிரட்டல் போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் தானியாகாலி பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் முகர்ஜி.  இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றும் இவர், காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். அவரது குடும்பத்தினர்   சொந்த ஊரில் தங்கி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர்,  இவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் போஸ்டர் ஒன்றை ஒட்டிச் சென்றனர்.அதில், ' பாகிஸ்தான் ஜிந்தாபாத். கவுரவின் தலை எங்களுக்கு தேவை.  ஹிந்துக்களை பாதுகாத்தால். உங்களது குடும்பத்தை கொலை செய்துவிடுவோம்.   மே.வங்கத்தை வங்காளமாக மாற்றுவோம், ' என வங்க மொழியில் கையால் எழுதி ஒட்டிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த பகுதியில் பதிவான சிசிடிவிக்களை வைத்து  விசாரித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத நான்கு பேர், இரண்டு டூவீலர்களில் வந்து போஸ்டரை ஒட்டி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராணுவ வீரரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு  அளிக்க போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  காஷ்மீரில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்திய நிலையில், ராணுவ வீரர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

