நடிகர் ஷாருக்கிற்கு மிரட்டல்; சத்தீஸ்கர் வழக்கறிஞர் கைது
நடிகர் ஷாருக்கிற்கு மிரட்டல்; சத்தீஸ்கர் வழக்கறிஞர் கைது
ADDED : நவ 13, 2024 03:46 AM

மும்பை ; பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரைச் சேர்ந்த வழக்கறிஞரை, மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான், 59. இவருக்கு, கடந்த அக்டோபரில் கொலை மிரட்டல் வந்தது. இதே போல், கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
நடிகர் சல்மான் கானுக்கு, சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்த நிலையில், நடிகர் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் போன் கால்கள் வந்ததால், அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனால், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் அவருக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் அலுவலகத்தை சமீபத்தில் தொடர்பு கொண்ட மர்ம நபர், 50 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், அழைப்பு வந்த எண் சத்தீஸ்கரைச் சேர்ந்த வழக்கறிஞர் உடையது என்பது தெரிந்தது.
போலீசார் சத்தீஸ்கர் சென்று, அவரை நேற்று கைது செய்தனர். அப்போது தன் மொபைல் எண் நவ., 2ம் தேதியே தொலைந்துவிட்டதாகவும், அதுகுறித்து போலீசில் புகார் அளித்ததாகவும் கூறினார்.
இருப்பினும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.