பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : நவ 02, 2026 07:21 PM
புதுடில்லி: பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இன்று (நவ.,2) இணைந்தனர்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு, 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் முதன்முறையாக வென்று, பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, இந்த முறை இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் மீண்டும் அதை கைப்பற்றும் நோக்கில் பணியாற்றி வருகிறது. மேற்கு வங்கத்தைப் போல பஞ்சாபிலும் வெற்றிக் கணக்கை தொடங்க பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 40 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, ஆளும் ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் வெளியிட்டது. இதில் பெரும்பாலானவர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள்.
இந்நிலையில், தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள குன்வர் விஜய் பிரதாப் சிங், ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேதன் சிங் ஜவுரமஜ்ரா ஆகிய மூன்று பேர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இவர்களின் தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை ஆம் ஆத்மி கட்சித் தலைமை நியமித்தது.
இதன் காரணமாக, அக்கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இவர்களில் பதன்மஜ்ரா, ஜவுரமஜ்ரா ஆகியோர் நேற்று (நவ.,1) ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நிலையில், குன்வர் விஜய் பிரதாப் சிங், இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தற்போதைய ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு, இந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களின் விலகல் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
