அக்னி வீரர் திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற மூவர் கைது
அக்னி வீரர் திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற மூவர் கைது
ADDED : ஏப் 26, 2025 12:42 AM
புவனேஸ்வர்: ஒடிஷாவில் அக்னி வீரர் திட்ட ஆள் சேர்க்கையில், லஞ்சம் பெற்ற இரண்டு கடற்படையினர் உட்பட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அக்னி வீரர் திட்டத்தின் கீழ், ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
சந்தேகம்
நாடு முழுதும் ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படும் தேர்வின் போது சேர்க்கப்படும் இளைஞர்கள், நான்கு ஆண்டுகள் பணியாற்ற முடியும்.
இந்த திட்டத்தின் கீழ், கடற்படைக்கு தேர்வாகும் இளைஞர்களுக்கு ஒடிஷாவில் உள்ள அதற்கான மண்டல அலுவலகமான, ஐ.என்.எஸ்., சில்காவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி மையத்தின் அதிகாரியான லெப்டினென்ட் கமாண்டர் அத்வித்யா விங், ஒடிஷாவின் பலுகான் போலீஸ் நிலையத்தில் கடந்தாண்டு புகார் அளித்தார்.
'அக்னி வீரர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒரு சில அதிகாரிகள் மீது சந்தேகம் உள்ளது. விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில், இந்த விவகாரத்தில் ஐ.என்.எஸ்., சில்காவில் பணிபுரியும் இரண்டு வீரர்கள் உட்பட ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து கடற்படை அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
இதையடுத்து, அந்தமான் - நிகோபார் ஐ.என்.எஸ்., கேசரியில் பணிபுரியும் சத்யம் சாஹர், ஐ.என்.எஸ்., சில்காவில் பணிபுரியும் வினய் குமார் ரே மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி பூஷன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் எஸ்.பி., சாகரிகா நாத் கூறுகையில், “அக்னி வீரர் ஆட்சேர்ப்பு மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளோம்.
''இவர்கள், அக்னி வீரர் விண்ணப்பதாரர்கள் சிலரிடம் போலீஸ் சரிபார்ப்பு, உடல் பரிசோதனை மற்றும் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்து, மிரட்டி பெரும் தொகையாக பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் இருவரை தேடி வருகிறோம்,” என்றார்.
கைது செய்யப்பட்டவர்களின் 12 வங்கி கணக்குகளை முடக்கிய போலீசார், அவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வு செய்து, வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

