ADDED : அக் 08, 2025 12:21 AM
புதுடில்லி:ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான, 80 வயது முதியவரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடில்லியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான 80- வயது முதியவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மூவர், அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
மேலும், டிஜிட்டல் முறையில் அவரை கைது செய்துள்ளதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு மிரட்டி, 42.49 லட்சம் ரூபாயை பல்வேறு வங்கிக் கணக்குள் வாயிலாக பறித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் வைஷ்ணவ், 37, விஷால் குமார், 25, மற்றும் ஷியாம் தாஸ், 25, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து காசோலை புத்தகங்கள், ஏ.டி.எம்., கார்டுகள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது .