ADDED : டிச 20, 2024 05:30 AM

மங்களூரு: மங்களூரில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பியை சேர்ந்த தேவராஜ், 37, முகமது பர்வீஸ் உமர், 25, ஷேக் தஹீம், 20. நண்பர்களான இவர்கள், போதைப்பொருள் விற்பனை செய்வதை தொழிலாக வைத்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையால், சற்று அடக்கி வாசித்து வந்து உள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தைமொட்டி மீண்டும் போதைப்பொருள் விற்பனையை துவங்கி உள்ளனர். நேற்று முன்தினம், கூலுார் ஆறு பகுதியில் விற்பனை செய்தனர். இதையறிந்த காவூர் போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 100 கிராம் எடையுள்ள எம்.எம்.டி.ஏ., கிறிஸ்டல், 7 கிராம் கோகைன், 17 கிராம் எடையுள்ள 35 எம்.எம்.டி.ஏ., மாத்திரைகள், 3 எல்.எஸ்.டி., போதை ஸ்டாம்புகள், எடை இயந்திரம், கார், பைக், கத்தி போன்றைவை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு, 9 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யயப்பட்டவர்களிடம் மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நடத்திய விசாரணையில், 'பர்வீஸ் உமர் மீது உடுப்பி மாவட்ட போலீஸ் நிலையத்தில் மூன்று கஞ்சா வழக்குகள் இருப்பதும், பிடிபட்ட போதைப் பொருட்களை புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது விற்பனை செய்வதற்காகவே வைத்திருந்தனர்' எனவும் தெரியவந்தது.