ADDED : மார் 26, 2025 08:32 PM
புதுடில்லி:தென்மேற்கு டில்லியில், பால் கடையில் பணம் மற்றும் பால் பொருட்களை திருடிய மூன்று பேர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்மேற்கு டில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள 'மதர் டெய்ரி' பால் கடை உரிமையாளர் ஹர்ஷ் யாதவ், அதன் உரிமத்தை குத்தகைக்கு விட விளம்பரம் செய்திருந்தார். அதைப்பார்த்து, கடந்த 21ம் தேதி, சேகர், 22, சுமித்,26, லகான்,19, ஆகிய மூவரும் வந்து பேச்சு நடத்தினர். குத்தகைக்கு எடுப்பதற்கு முன், இரண்டு நாட்கள் வியாபாரம் செய்து பார்க்க அனுமதி கேட்டனர். ஹர்ஷ் யாதவும் அதற்கு சம்மதித்தார்.
கடந்த 23ம் தேதி, கடையில் இருந்த 37,000 ரூபாய் பணம் மற்றும் பால் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.
ஹர்ஷ் யாதவ் கொடுத்த புகார்படி, வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், உத்தர பிரதேச மாநிலம் பக்பத் அருகே அப்துல்லாபூர் மெவ்லா கிராமத்தில் பதுங்கி இருந்த மூவரையும் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.