வங்கதேசத்தினர் மூவர் உயிரிழப்பு: ஆடு திருட வந்தபோது கிராம மக்கள் தாக்கியதாக மத்திய அரசு தகவல்
வங்கதேசத்தினர் மூவர் உயிரிழப்பு: ஆடு திருட வந்தபோது கிராம மக்கள் தாக்கியதாக மத்திய அரசு தகவல்
ADDED : அக் 17, 2025 07:03 PM

புதுடில்லி: திரிபுராவின் பித்யாபில் பகுதியில், எல்லை தாண்டி அத்துமீறி ஆடுகள் திருட முயற்சி செய்தபோது கிராம மக்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வங்கதேச கடத்தல் காரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இந்திய எல்லைக்குள் 3 கிலோமீட்டர் தொலைவில் நடந்தது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு சர்வதேச எல்லையைத் தாண்டி பித்யாபில் கிராமத்திலிருந்து கால்நடைகளைத் திருட முயன்றது. திருட்டு முயற்சியின் போது, ஊடுருவும் நபர்கள் இரும்பு ஆயுதங்கள் மற்றும் கத்திகளால் உள்ளூர் கிராம மக்களைத் தாக்கினர். இதன் விளைவாக ஒரு இந்திய கிராமவாசி கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்தியவர்களை எதிர்த்ததால், கடத்தல்காரர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்றாவது நபர் ஒரு நாள் கழித்து மருத்துவமனையில் இறந்தார். அதிகாரிகள் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வங்கதேசத்தினர் 3 பேர் உடல்களும் நிலையான எல்லை நடைமுறைகளைப் பின்பற்றி வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சர்வதேச எல்லையின் புனிதத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் எல்லை வேலி அமைப்பதில் ஒத்துழைக்கவும் வங்கதேச அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
உஷார் நிலை!
எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. மேலும் கடத்தல் முயற்சிகள் அல்லது வன்முறையைத் தடுக்க உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
எல்லையில் வேலி!வங்கதேசத்துடனான 4,096 கி.மீ நில எல்லையில் 3,000 கி.மீட்டருக்கும் சற்று அதிகமான தூரத்திற்கு இந்தியா ஏற்கனவே வேலி அமைத்துள்ளது. மீதமுள்ள பகுதிக்கு வேலி அமைப்பதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவிப்பதால், குற்றவாளிகள் விரைவில் எல்லையைத் தாண்டி ஊடுருவ வசதியாக இருக்கிறது என இந்தியத் தரப்பு நீண்ட காலமாக வாதிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.