தெருநாய்க்கடி விவகாரத்தை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைப்பு
தெருநாய்க்கடி விவகாரத்தை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைப்பு
ADDED : ஆக 14, 2025 01:11 AM
தெருநாய்க்கடி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபீஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.
இரு தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு விசாரித்தது.
அப்போது, 'டில்லியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடித்து, காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும், நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை டில்லி அரசு மற்றும் மாநகராட்சி அவசர வேலையாக கருதி மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு ஆதரவு ஒரு பக்கம் எழுந்தாலும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், சில வழக்கறிஞர்கள் முக்கியமான முறையீட்டை நேற்று காலை முன் வைத்தனர்.
குறிப்பாக தெரு நாய்களை பிடிக்கும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரினர்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, ''இது பொதுமக்கள் நேரடியாக சந்திக்கும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இருப்பினும், இந்த உத்தரவை மேற்கொண்டு விசாரிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அமைத்து உள்ளார்.
அதன்படி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இருக்கிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -