ADDED : அக் 29, 2026 10:33 PM

குருகிராம்: டில்லி – வதோதரா விரைவு சாலையில், சோஹ்னா அருகே சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது, கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
டில்லி, ராஜோக்ரியை சேர்ந்த பூம் பிரசாத் என்பவரின் குடும்பத்தினர், இன்று (அக்.,29) பாலாஜி கோவிலுக்கு சென்று, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை, பூம் பிரசாத் ஓட்டி வந்தார். இவர் டாக்ஸி டிரைவாக பணியாற்றியவர்.
டில்லி – வதோதரா விரைவுச்சாலையில் கார் அதிவேகமாக சென்றது. லோஹ்தாகி பகுதியில், ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது அதிவேகமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பஸ்சுக்குள் சிக்கி நொறுங்கியது.
இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதியும், அவர்களது மகளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி, காயமடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமான நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
