ADDED : செப் 30, 2024 10:49 PM

பெங்களூரு : கடலில் இறங்கி மீன் பிடிக்கும் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. முதன் முறையாக, 'கடல் ஆம்புலன்ஸ்' வாங்க தயாராகிறது.
இதுகுறித்து, மீன் வளத்துறை வெளியிட்ட அறிக்கை:
மீனவர்கள், சுற்றுலா பயணியரின் பாதுகாப்புக்காக 'கடல் ஆம்புலன்ஸ்' சேவை துவக்கும்படி, பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல், கடலோரப் பகுதியில் பிரசாரம் செய்தபோது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், கடல் ஆம்புலன்ஸ் சேவை துவங்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தினர். இதை அவரும்ஏற்றுக்கொண்டார்.
ரூ.7 கோடி ரூபாய்
காங்கிரஸ் அரசு அமைந்த பின், கடல் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல் உத்தரவிட்டிருந்தார். இதன்படி கடல் ஆம்புலன்ஸ் வாங்க, 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போது ஏழு கோடி ரூபாய் செலவில், கடல் ஆம்புலன்ஸ் வாங்க, மீன் வளத்துறை தயாராகிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் இந்த சேவை கிடைக்கும். 320 கி.மீ., துார கடலோரப் பகுதி களின், மூன்று துறைமுகங்களில் கடல் ஆம்புலன்ஸ் சேவை துவங்கும். தட்சிண கன்னடாவின் மங்களூரு துறை முகம், உடுப்பியின் மல்பே,உத்தரகன்னடாவின் ததடி துறை முகங்களில், திட்டம் செயல்படுத்தப்படும்.
கடலில் மீனவர்கள் அல்லது பொது மக்களுக்கு, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் கப்பல்கள் உடனடியாக அங்கு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும். டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
ஒவ்வொரு ஆம்புலன்சிலும், தேவையான சிகிச்சை வசதி, ஐந்து நோயாளிகளை அழைத்துச் செல்லும் வசதி இருக்கும். பாதுகாப்பு ஊழியர், ஆக்சிஜன் சிலிண்டர்உட்பட மருத்துவஉபகரணங்கள் வைக்கப்படும்.
டெண்டர் பெறும்நிறுவனம், மீன் வளத்துறை நிர்ணயித்துள்ளபடி, கடல் ஆம்புலன்ஸ்களை வடிவமைக்க வேண்டும். இதற்காக மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள்
மீன் வளத்துறை கல்லுாரி பிரதிநிதி, மங்களூரு, உடுப்பி, கார்வாரின் மீன் வளத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கமிட்டி, கடல் ஆம்புலன்ஸ் விதிமுறைப்படி வடிவமைக்கிறதா என்பதை கண்காணிக்கும்.
கடலில் ஏற்படும் விபத்துகள் உட்பட அசம்பாவிதங்கள் நடந்தால், இயற்கை சீற்றம் ஏற்படும் போது, கடல் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும்.
புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி நேரங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில்இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.