மூன்று டன் இரும்பு தகடு திருட்டு வழக்கு: வாலிபர் கைது; இருவருக்கு வலை
மூன்று டன் இரும்பு தகடு திருட்டு வழக்கு: வாலிபர் கைது; இருவருக்கு வலை
ADDED : ஜூன் 02, 2025 11:54 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, தனியார் இரும்பு நிறுவனத்திலிருந்து, 3 டன் இரும்பு தகடு திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டில் செயல்படும், தனியார் இரும்பு நிறுவனத்தில் கடந்த மே மாதம், 20ம் தேதி நள்ளிரவு, 3 டன் எடை கொண்ட இரும்பு தகடு திருட்டு போனது. சம்பவம் குறித்து, நிறுவன நிர்வாகத்தினர் புதுச்சேரி (கசபா) போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார், சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் இரும்பு தகடுகளை திருடி வாகனத்தில் கடத்தியுள்ளது தெரியவந்தது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில், தமிழகத்தில், திருநெல்வேலி சீலத்திக்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துகுமார், 20, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடுகின்றனர்.