ADDED : மார் 18, 2024 05:22 AM
பெங்களூரு : மின் இணைப்பு வழங்க, லஞ்சம் பெற்ற ஓய்வு பெற்ற அதிகாரிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரில் 'ஸ்கந்தா என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் நடத்தும் தயானந்தா, மின்சாரம் தொடர்பான பணிகள் செய்கிறார்.
இவர் கோனேன அக்ர ஹாராவில் உள்ள கட்டடத்துக்கு, மின் இணைப்பு ஏற்படுத்த, அனுமதி பெற்றிருந்தார். இதற்கு அனுமதி கோரி, 2016ல் மின் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மின் இணைப்பு ஏற்படுத்த, 25,000 ரூபாய் லஞ்சம் தரும்படி, மின்துறை அதிகாரி சதானந்தா கேட்டார். இது குறித்து, ஏ.சி.பி., என்ற ஊழல் ஒழிப்பு படையில் தயானந்தா, புகார் செய்திருந்தார்.
வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், 2016, செப்டம்பர் 30ல், அதிகாரி சதானந்தாவை கைது செய்தனர்.
லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சதானந்தா பணி ஓய்வு பெற்றார்.
விசாரணையில் சாட்சிகள், ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், சதானந்தா குற்றவாளி என, மார்ச் 12ல் அறிவித்தது.
அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது.
அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக இரண்டு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

