மகாதேவபுரா கிராமத்தில் புலி வனத்துறையினர் எச்சரிக்கை
மகாதேவபுரா கிராமத்தில் புலி வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : ஜன 18, 2024 05:01 AM
மாண்டியா: ஸ்ரீரங்கபட்டணாவின், மகாதேவபுரா கிராமத்தில் புலி நடமாடுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 'யாரும் தனியாக நடமாட வேண்டாம்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.
மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவின், மகாதேவபுரா கிராமத்தில் வசிக்கும் சென்னஹள்ளி என்பவர், பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் தன் விவசாய நிலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். நேற்று முன் தினம் மாலை 4:30 மணியளவில், புலி நடந்து சென்றது. இந்த காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, கிராமத்தினர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், புலி நடமாடிய நிலத்தை பார்வையிட்டனர். புலியின் கால் தடங்களை உறுதி செய்தனர். நிலம் ஈரமாக உள்ளதால், கால் தடங்கள் தெளிவாக தெரிகிறது.
புலி நடமாடுவதால், கிராமத்தினர் கிலியடைந்துள்ளனர். தனியாக நடமாடவும் அஞ்சுகின்றனர். ஆடு, மாடுகளை மேயவும் விடுவதில்லை. வனத்துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். 'கிராமத்தினர் தனியாக நடமாட வேண்டாம். சிறு பிள்ளைகளை வெளியே விட வேண்டாம்' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆங்காங்கே அதிநவீன கேமராக்கள் பொருத்தி, புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். புலியை பிடிக்க கூண்டு வைக்கவும் ஏற்பாடு செய்கின்றனர்.