ADDED : ஜூன் 01, 2025 12:45 AM

புதுடில்லி : 'டைகர் மேன்' என அழைக்கப்படுபவரும், வனவிலங்கு பாதுகாவலருமான வால்மிக் தாபர், 73, டில்லியில் நேற்று, புற்றுநோயால் காலமானார்.
டில்லியில், 1952ல் பிறந்த வால்மிக் தாபர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, வனவிலங்கு பாதுகாப்புக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, புலிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்.
கடந்த 1988ல், வனவிலங்கு பாதுகாப்புக்கான லாப நோக்கமற்ற அமைப்பான, 'ரந்தம்போர்' அறக்கட்டளையை அவர் நிறுவினார்.
தேசிய வனவிலங்கு வாரியம் உட்பட, 150க்கும் மேற்பட்ட அரசு குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களில் அவர் பணியாற்றி உள்ளார். புலி வேட்டையை தடுத்து, இயற்கை புலி வாழ்விடங்களை பாதுகாப்பதற்காக போராடிய அவர், 'டைகர் மேன்' என, அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
டில்லியில் வசித்து வந்த வால்மிக் தாபர், நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வால்மிக் தாபருக்கு, சஞ்சனா கபூர் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.