புலிகள் எண்ணிக்கை உயர்ந்தாலும் போதுமான வாழ்விடம் இல்லை
புலிகள் எண்ணிக்கை உயர்ந்தாலும் போதுமான வாழ்விடம் இல்லை
ADDED : ஜன 02, 2026 12:20 AM
போபால்: நம் நாட்டில் கடந்த ஆண்டு, 166 புலிகள் உயிரிழந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட, 40 அதிகம் என தெரியவந்துள்ளது.
உ லகிலேயே அதிகளவு புலிகளின் நம் நாட்டில் தான் உள்ளன. இங்குள்ள புலிகள் எண்ணிக்கை குறித்த தகவல்களை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில், 75 சதவீதம் இந்தியாவில் உள்ளன. நம் நாட்டில், கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால், 166 புலிகள் இறந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 40 அதிகம்.
'புலிகள் மாநிலம்' என அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக, 55 புலிகள் கடந்த ஆண்டு இறந்துள்ளன. இதேபோல் மஹாராஷ்டிராவில் 38, கேரளாவில் 13, அசாமில் 12 புலிகள் இறந்தன. கடந்த ஆண்டு, நாட்டில் பலியான 166 புலிகளில், 31 குட்டிகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனவிலங்குகள் நிபுணர் ஜெய்ராம் சுக்லா கூறியுள்ளதாவது:
மத்திய பிரதேசத்தில் கடந்த 2014 முதல் புலிகள் எண்ணி க்கை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி. நம் நாட்டில் 2018ல் புலிகளின் எண்ணிக்கை, 2,967 ஆக இருந்தது. இது, 2022-ல் 3,682ஆக அதிகரித்தது.
புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அவற்றுக்கான போதிய வாழ்விட இடவசதி இல்லாததே புலிகள் இறப்புக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

