திருமலை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்
திருமலை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்
ADDED : நவ 19, 2025 04:40 AM

திருப்பதி: திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், டிசம்பர், 30 முதல் ஜனவரி, 8ம் தேதி வரையிலான பரமபத வாசல் தரிசனத்திற்கு, நேரடி டோக்கன்கள் வழங்குவது இல்லை என்றும், அனைத்தையும் ஆன்லைன் முறைக்கு மாற்றவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதிலும், டிசம்பர், 30, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில், தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் வழங்கவும் தீர்மானித்துஉள்ளது.
ரத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
பெருமாள் கோவில்களில் விசேஷமாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு, இந்த ஆண்டு டிசம்பர், 30ம் தேதி நடைபெற உள்ளது. திருமலையிலும் அன்றைய தினம் தான் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
அன்று முதல் ஜனவரி, 8ம் தேதி வரையிலான, 10 நாட்களும், ஏழுமலையானை தரிசிப்பவர்கள், பரமபத வாசல் வழியாக செல்லவும் அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி உத்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் நிர்வாக தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நேற்று நடந்தது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை:
வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும், டிசம்பர், 30 முதல் ஜனவரி, 8ம் தேதி வரையிலான 10 நாட்களிலும், சாதாரண பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பரமபத வாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும், 182 மணி நேரத்தில், 164 மணி நேரம் சாதாரண பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டிச., 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்களிலும், 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
குலுக்கல் முறை இந்த மூன்று நாட்களும், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
குலுக்கல் முறை தரிசன டோக்கன் பெறுவதற்கான முன்பதிவு, வரும், 27 முதல் டிசம்பர், 1ம் தேதி வரை நடைபெறும்.
பின், டிசம்பர், 2ம் தேதி நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்படும்.
ஜனவரி, 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் தலா, 15,000 பேருக்கு, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களும், ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்கள் தினமும் தலா 1,000 பேருக்கும் ஆன்லைனில் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, டிக்கெட் கவுன்டர்களில் டோக்கன் பெற கூட்டம் அலைமோதியதில் நெரிசல் ஏற்பட்டு ஆறு பக்தர்கள் உயிரிழந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

