எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் மத்திய அமைச்சருக்கு எதிராக ராஜ்யசபாவில் தீர்மானம்
எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் மத்திய அமைச்சருக்கு எதிராக ராஜ்யசபாவில் தீர்மானம்
ADDED : டிச 12, 2024 10:00 PM

புதுடில்லி: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக கூறி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதானி விவாகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரு அவைகளும் முடங்கி வருகின்றன.
அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ , ' எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் இருக்க தகுதியற்றவர்கள், ' என விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அவருக்கு எதிராக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சாகரிகா கோஷ் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தில் 60 எம்.பி.,க்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்.
சாகரிகா கோஷ் கூறும்போது, '' பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பார்லிமென்டை சுமூகமாக நடத்திச் செல்வதற்கு பதில், எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு முற்றிலும் பொருந்தாத செயல் ஆகும். அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார், '' என்றார்.