இலங்கையில் இன்று பார்லி., தேர்தல்; பெரும்பான்மை பெறுவாரா அதிபர்?
இலங்கையில் இன்று பார்லி., தேர்தல்; பெரும்பான்மை பெறுவாரா அதிபர்?
ADDED : நவ 14, 2024 12:37 AM

கொழும்பு: நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்று அதிபரானார்.
பார்லி.,யில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் மட்டுமே இருந்த நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை வேண்டும் என்பதால், பார்லி.,யை கலைத்து உத்தரவிட்ட அவர், நவ., 14ல் தேர்தல் நடக்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், இலங்கையில் இன்று பார்லி., தேர்தல் நடக்கிறது. மொத்தம் 225 எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான இந்த தேர்தலில், 1.7 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 13,314 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 90,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதே போல் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
மொத்தம் 225 எம்.பி.,க்கள் உடைய இலங்கை பார்லி.,யில், 196 எம்.பி.,க்களை மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்வர். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற ஓட்டு சதவீதத்தின்படி, விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.
அதிபர் தேர்தலில், 50 சதவீத ஓட்டுகளை பெற தவறிய அதிபர் அனுரா குமார திசநாயகே, பார்லி., தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். பெரும்பான்மை கிடைத்தால் தான், அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள முடியும்.
பார்லி., தேர்தலில், இந்த முறை ராஜபக்சே சகோதரர்கள் போட்டியிடவில்லை. அதே போல், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும் போட்டியிடவில்லை. 1977க்கு பின், அவர் போட்டியிடாத முதல் பார்லிமென்ட் தேர்தல் இது.