இன்று ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரில் உச்சகட்ட பாதுகாப்பு
இன்று ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரில் உச்சகட்ட பாதுகாப்பு
ADDED : அக் 12, 2024 12:37 AM

மைசூரு : உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வான ஜம்பு சவாரி ஊர்வலம் இன்று நடக்கிறது. இதை ஒட்டி, நகர் முழுதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உலக பிரசித்தி பெற்ற 414வது மைசூரு தசரா விழாவை, இம்மாதம் 3ம் தேதி, மூத்த கன்னட இலக்கியவாதி ஹம்.ப.நாகராஜய்யா, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி துவக்கி வைத்தார்.
அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், மைசூரின் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. அரண்மனை வளாகத்தில் நேற்று முன்தினம் வரை, தினமும் ஒவ்வொரு விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மன்னர் வம்சத்தின் யதுவீர், ஆயுத பூஜையை ஒட்டி நேற்று பட்டத்து யானை, குதிரை, வாகனங்கள், ஆயுதங்களுக்கு பூஜை செய்தார். தசரா யானைகள் மற்றும் பாகன்களுக்கு, மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா, சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்; தன் கையாலேயே பரிமாறினார்.
தசரா விழாவின் இறுதி நாளான இன்று விஜயதசமியை ஒட்டி, அரண்மனை வளாகத்தில் உள்ள வன்னி மரத்துக்கு, மன்னர் வம்சத்தின் யதுவீர் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்வார். அரசு சார்பில் முதல்வர் சித்தராமையா, பகல் 1:41 மணி முதல் 2:10 மணிக்குள் நந்தி கொடிக்கு பூஜை செய்வார். இதையடுத்து, ஜம்பு சவாரி ஊர்வலம் துவங்கும்.
தங்க அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, புகழ்பெற்ற விஜயதசமி ஊர்வலத்தை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஹாதேவப்பா, உடையார் மன்னர் வம்சத்தின் யதுவீர் ஆகியோர், மாலை 4:00 மணி முதல் 4:30 மணிக்குள் துவக்கி வைப்பர். அப்போது, ஏழு பீரங்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும்.
ஜம்பு சவாரி ஊர்வலத்துக்காக அரண்மனை வளாகத்தில், பிரபலங்கள், கோல்டு கார்டு சுற்றுலா பயணியர் உட்பட 5,000 பேருக்கு மட்டும் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
ஊர்வலம் செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊர்வல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முன்னெச்சரிக்கையாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானையை சுற்றி, நவீன துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரண்மனை வளாகத்தில் இருந்து புறப்படும் ஊர்வலம், 5 கி.மீ., துாரத்தில் இருக்கும் பன்னி மண்டபத்தை அடையும். அங்கு, இரவு 7:00 மணிக்கு போலீஸ் தீப்பந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைப்பார். இதன் மூலம், 10 நாள் தசரா விழா நிறைவு பெறும்.
நகர் முழுதும், 5,000த்துக்கும் அதிகமான போலீசார் நேற்று இரவு முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்பு சவாரி ஊர்வலத்தை ஒட்டி, மைசூரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.