சுரங்க தொழிலாளர் வீடுகளுக்கு நாளை சான்றிதழ் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கல்
சுரங்க தொழிலாளர் வீடுகளுக்கு நாளை சான்றிதழ் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கல்
ADDED : பிப் 26, 2024 07:14 AM

தங்கவயல்: தங்கச் சுரங்க தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கான உடைமை சான்றிதழ் நாளை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது.
தங்கச் சுரங்கம் 2001 ல் மூடப் பட்ட போது எஸ்.டி.பி.பி., எனும் ஸ்பெஷல் டெர்மினல் பெனிபிட் பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கச் சுரங்கம் மூடும் போது ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்களுக்கு சுரங்க குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அவர்களின் வீடுகள், அவர்களுக்கே சொந்தம் ஆக்கப் படும் என்ற திட்டமும் ஒன்று.
தங்கச் சுரங்க நிர்வாக அதிகாரி நன்மதி செல்வன் நேற்று முன் தினம் கூறுகையில், ''எஸ்.டி.பி.பி., தொழிலாளர்கள் 2,800 பேர் வசித்து வரும் வீடுகளில், முதற் கட்டமாக 1,900 பேருக்கு உடமை சான்றிதழ் வழங்கப் படும்.
''மற்ற தொழிலாளர்களுக்கு படிப்படியாக வழங்கப் படும். இதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
''வரும் 27ல் நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி சான்றிதழை வழங்குகிறார்,'' என்றார்.
சான்றிதழ் பெறும் போது, நெரிசலை தவிர்க்க பயனாளிகளுக்கு நேற்று 'டோக்கன்' வழங்கப் பட்டது. இதனை பெற தங்கச் சுரங்க நிறுவன தலைமை நிலையமான சொர்ண பவன் முன், முன்னாள் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
உடைமை சான்றிதழ் பெறுவதற்காக வழங்கப்பட்ட 'டோக்கன்' பெறுவதற்கு நீண்ட வரிசையில் எஸ்.டி.பி.பி., தொழிலாளர்கள். இடம்: தங்கவயல்.

