பயணியரின் அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டிய சுங்கச்சாவடி மேலாளர்
பயணியரின் அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டிய சுங்கச்சாவடி மேலாளர்
ADDED : டிச 11, 2025 12:17 AM

சுல்தான்பூர்: உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி'க்கள் மூலம் வாகன பயணியரின் அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டி பணம் பறித்த சுங்கச்சாவடி மேலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உ.பி.,யின் சுல்தான்பூர் மாவட்டம் ஹலியாபூரில் உள்ள சுங்கச்சாவடியில் உதவி மேலாளராக இருப்பவர் அசுதோஷ் பிஸ்வாஸ். இவர் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் வரும் வாகனங்களை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதற்காக அந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி'க்களை பயன்படுத்தி, அவ்வழியே வாகனங்களில் செல்லும் இளம் தம்பதியினரின் அந்தரங்க செயல்களை வீடியோவாக படம் பிடித்துள்ளார்.
அந்த வீடியோக்களை சமூகவலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ஒரு தம்பதியிடம், 32,000 ரூபாய் பறித்துள்ளார். அதன் பிறகும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளார்.
இது போன்று அந்த சாலையையொட்டிய சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமியரை கண்காணித்து, அவர்களின் ஆபாச பட பதிவுகளை காட்டி பலரிடம் அசுதோஷ் பணம் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்ந்து சுங்கச்சாவடி நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதன்படி சுங்கச்சாவடி உதவி மேலாளர் அசுதோஷ் பிஸ்வாசை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

