திருப்பதியில் பட்டு சால்வை வாங்கியதில் ரூ.54 கோடி ஊழல்
திருப்பதியில் பட்டு சால்வை வாங்கியதில் ரூ.54 கோடி ஊழல்
ADDED : டிச 11, 2025 12:16 AM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கலப்பட நெய் கொள்முதல், உண்டியல் பணம் திருட்டு உள்ளிட்ட புகார்களை தொடர்ந்து, தற்போது தரிசனத்திற்கு வரும் வி.ஐ.பி.,க்களுக்கு வழங்க வாங்கப்பட்ட பட்டு சால்வையில், 54 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்டறிந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களில் வி.ஐ.பி.,க்கள் மற்றும் அதிக நன்கொடை வழங்கி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் சார்பில் சிவப்பு நிற பட்டு சால்வை போர்த்தப்படும். இதை 2015ல் இருந்து 2025 வரை ஒப்பந்ததாரர் ஒருவர் வினியோகித்தார்.
ஒரு பட்டு சால்வையின் விலை 1,389 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.
இதன் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததால், லஞ்ச ஒழிப்பு துறையினர் சில சால்வைகளை மத்திய பட்டு வாரியத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பினர். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டவை 100 சதவீத பாலியஸ்டர் சால்வைகள் என தெரியவந்தது. 10 ஆண்டுகளில் இதில், 54 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக கணக்கிட்டு உள்ளனர்.
ஏற்கனவே லட்டு பிரசாதம் தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில், மாட்டு கொழுப்பு கலந்திருந்ததாக புகார் எழுந்து, பக்தர்களிடையே அதிர்வலைகளை கிளப்பியது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இதே போல், பக்தர்கள் ஸ்ரீவாரி உண்டியலில் போட்ட பணத்தை எண்ணும் மையத்தில், வெளிநாட்டு கரன்சிகளை ஊழியர் ஒருவர் திருடும் காட்சி வெளியானது.
இந்த இரு வழக்குகள் ஏற்படுத்திய அதிர்ச்சியே விலகாத நிலையில், தற்போது மற்றொரு ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

