sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாளை ஒத்திகை: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

/

நாளை ஒத்திகை: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

நாளை ஒத்திகை: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

நாளை ஒத்திகை: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

53


UPDATED : மே 05, 2025 11:59 PM

ADDED : மே 05, 2025 11:53 PM

Google News

UPDATED : மே 05, 2025 11:59 PM ADDED : மே 05, 2025 11:53 PM

53


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி :இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை அதிகாரிகளுடன், பிரதமர் மோடியும் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங்கை அழைத்து பேசினார். ராணுவத்தின் உத்தேச தாக்குதல் திட்டம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கினார்.

இந்த நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அவசர உத்தரவு பிறப்பித்தது. போர் நடக்கும்போது பொது மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகை. இது போன்ற பயிற்சி, 1971ல் நடந்த இந்தியா - பாக்., போரின்போது கடைசியாக நடத்தப்பட்டது.

உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு:


*வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்க விடுதல்: எதிரி விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி கேட்டதும், பொதுமக்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிய வேண்டும். சாலைகள், வீதிகளில் இருந்தால் சட்டென கீழே படுக்க வேண்டும். இந்த சைரன்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மாநில அரசுகள் முதலில் சோதிக்க வேண்டும்.

* தாக்குதல் நடத்தப்பட்டால் பாதுகாத்து கொள்வது குறித்து, பொது மக்கள், மாணவர்களுக்கு பயிற்சி: தற்போதைய தலைமுறையினர் போரை பார்த்தது இல்லை என்பதால், இது மிகவும் முக்கியமானது. எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் வருவது தெரிந்ததும், மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக தெரு விளக்குகள் அணைக்கப்படும். வீடுகளில் மின் விளக்குகள் எரிந்தால், அது வெளியே தெரியாமல் இருக்க கதவு, ஜன்னல்களை மூட வேண்டும். கண்ணாடி ஜன்னலாக இருந்தால் கருப்பு தாள் அல்லது துணியால் மறைக்க வேண்டும். மின் விளக்குகளை அப்போது அணைத்து விடுவது உத்தமம்.

* விபத்து தடுப்பு நடவடிக்கைகள்: திடீர் அலெர்ட் வந்தால், உடனே வீட்டுக்கு போய் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் வரும். அதனால் ஏற்படும் அவசரத்தில், வாகனங்கள் மோதி விபத்து நேர்வது சகஜம். அப்போது என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதற்கான பயிற்சி இது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.

* முக்கிய ஆலைகள், ஆயுத கிடங்குகளை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு: போரில் எதிரிகள் வைக்கும் முதல் குறி, எதிரியின் ஆயுத தளங்களாக இருக்கும். அடுத்தது, மின் உற்பத்தி நிலையம், டெலிவிஷன் ஸ்டேஷன், டெலிபோன் எக்சேஞ்ச் போன்ற இடங்களாக இருக்கும். இவை எந்த இடத்தில் உள்ளன என்பதை எதிரிகள் ஏற்கனவே அறிந்திருப்பர். ஆனால், குண்டு வீசும் விமானங்களோ, ஏவுகணைகளோ வரும்போது, அவர்கள் அறிந்திருந்த இடத்தில் இந்த நிலையங்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி குழப்புவதற்காக, அந்த ஆலைகள் அல்லது அமைப்புகளை காடு, மரங்கள், செடி, கொடி போன்ற துணி அல்லது தார்பாய்கள் போர்த்தி மறைக்க வேண்டும்.

* மீட்பு பணி பயிற்சி : என்ன தான் உஷாராக இருந்தாலும், அதையெல்லாம் மீறி சில இடங்கள் நேரடியாக தாக்கப்பட்டு, பொதுமக்கள் காயம் அடைய வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில், அந்த இடங்களில் இருந்து, இறந்தவர்களையும் காயம் அடைந்தவர்களையும் காலதாமதம் இல்லாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது எப்படி என்பதற்கான பயிற்சி இது.

மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் முழு ஆதரவு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தார். காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியோரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். ரஷ்யாவின், 80வது வெற்றி தின கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதியில் நம் நாட்டில் நடக்கும் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும்படி, ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேசினர்.








      Dinamalar
      Follow us