சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு தினம்: வெளிநாடுகளின் தலைமை நீதிபதிகள் பங்கேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு தினம்: வெளிநாடுகளின் தலைமை நீதிபதிகள் பங்கேற்பு
ADDED : நவ 26, 2025 05:35 PM

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் பல நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள் பங்கேற்றனர்.
பூடான் தலைமை நீதிபதி லியோன்போ நோர்பு, கென்யா தலைமை நீதிபதி மா்ரதா கோமே, மொரிஷியஸ் தலைமை நீதிபதி ரெஹானா பீபி, இலங்கை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கென்யா, இலங்கை, நேபாளம் மற்றும் மலேஷியா நாடுகளின் மூத்த நீதிபதிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நடவடிக்கைகளை பார்வையிட்டனர். அவர்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மொரிஷியஸ் தலைமை நீதிபதி ரெஹானா பீபி பேசியதாவது: சட்டத்தை படிப்பதிலும், விளக்குவதிலும் இந்திய நீதிமன்றங்களால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்தை வாழ்த்துவதில் மற்ற நீதிபதிகளுடன் நானும் இணைகிறேன். இந்த அமர்வு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
கென்யா தலைமை நீதிபதி மார்த்தா கோம் கூறியதாவது: இந்திய சுப்ரீம் கோர்ட்டின் நீதித்துறை மற்றும் பணிகளை தனது நாடு எதிர்நோக்குகிறது. இந்தியாவில் மட்டும் அல்லாமல், அனைத்து பொதுச் சட்ட நாடுகளிலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த இணைந்து பணியாற்றுவதில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி பல்கலையில் உள்ள சட்ட மையத்தில் படித்தவரான பூடான் தலைமை நீதிபதி லியோன்போ நோர்பு கூறுகையில், இந்தியாவில் மிகத்திறமையான, புத்திசாலியான, வல்லுநர்கள் உள்ளனர். இயற்கை வளத்தில் இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு 106 திருத்தங்களை சந்தித்துள்ளது. நான் டில்லியில் படித்த போது 91 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்தியா மீது மிகப்பெரிய மதிப்பு வைத்துள்ளோம் என்றார்.
இலங்கை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா கூறுகையில், இந்த வாய்ப்பு அளித்ததற்கு பெருமைப்படுகிறேன். நாம் ஒரே மாதிரியான பாரம்பரியத்தையும், சட்ட அமைப்பையும் பகிர்ந்து கொள்கிறோம். இன்றைய அமர்வில் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். சென்னை உயர்நீதிமன்றம் 1800ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கை சுப்ரீம் கோர்ட் 1801ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

