ADDED : செப் 07, 2025 11:54 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள புர்ஜுவா என்ற மலைப் பகுதியில், நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று காலை அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்சல் அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணையில், சுட்டுக் கொல்லப்பட்ட நபர், அமித் ஹன்ஸ்தா என்கிற அப்தான் என்பதும், நக்சல் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டதும், அவரது தலைக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டதும் தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.