கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
கரடியின் நகங்களை பிடுங்கி சித்ரவதை: சத்தீஸ்கரில் பரபரப்பு
ADDED : ஏப் 12, 2025 10:20 PM

புதுடில்லி: சத்தீஸ்கரில் நகங்களை பிடுங்கியும், வாயை உடைத்தும் கிராமத்தினர் செய்ததால் கரடி ஒன்று இறந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை உறுதியளித்து உள்ளது.
அந்த வீடியோவில், கரடியின் கை எக்கு கம்பியால் மரப்பலகையில் கட்டப்பட்டிருக்கிறது. அதன் அருகில் நின்ற ஒருவர் கரடி வலியால் துடிக்கும் போது அதன் காதுகளை முழு பலத்துடன் இழுக்கிறார்.
மற்றொரு நபர் தனது கைகளால் கரடியின் தலையில் கடுமையாக அடித்து கொடுமைப்படுத்தினார். சிறிது நேரம் கழித்து, அதே நபர் கரடியின் நகங்களை பிடுங்குவதும் அதில் பதிவாகி உள்ளது. இந்த சித்ரவதையால் கரடி சத்தம் போட்டு கதறியது.
இதனை குழந்தைகள், பெண்கள் மற்றும் கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தனர். கிராம மக்கள் கரடியை கொடூரமாக அடித்து அதன் வாயை உடைத்ததால் அதிக ரத்தம் வழிந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
இது குறித்து வனத்துறை வனப்பாதுகாவலர் ஆர்.சி. துக்கா கூறியதாவது:
கரடியை துன்புறுத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் அளிக்கப்படும். இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வழிவகை இருக்கிறது. வீடியோவில் காணப்படும் நபர்கள் யார், அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு துக்கா கூறினார்.