ADDED : ஏப் 02, 2025 03:52 AM
ஜெய்ப்பூர்; ராஜஸ்தானில் பீவார் மாவட்டத்தின் பதியாவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சட்டவிரோதமாக ரசாயன தொழிற்சாலை இயங்கி வந்தது. நேற்று முன்தினம் இரவு அத்தொழிற்சாலையின் டேங்கரில் இருந்து நச்சுவாயு கசிந்து, அந்த பகுதி முழுதும் பரவியது.
இந்த நச்சு வாயுவை சுவாசித்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இதில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நச்சுவாயுவை சுவாசித்த, அத்தொழிற்சாலையின் உரிமையாளர் சுனில் சிங்கால், 47, அப்பகுதியைச் சேர்ந்த தயாராம், 52, நரேந்திர சோலங்கி, 40, ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்களை அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றினர்.
அந்த தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கியது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, அத்தொழிற்சாலையை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

