ஏ.ஐ., கேமராக்களால் புது சிக்கல் போக்குவரத்து போலீசார் திணறல்
ஏ.ஐ., கேமராக்களால் புது சிக்கல் போக்குவரத்து போலீசார் திணறல்
ADDED : ஜன 21, 2025 07:19 AM
மைசூரு: போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க, சாலைகளில் பொருத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போலீசாருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள், போலீசாரின் கண்களை மறைத்தாலும், கண்காணிப்பு கேமராக்களின் கண்களில் இருந்து தப்ப முடியவில்லை. இது போக்குவரத்து போலீசாருக்கு, வரப்பிரசாதமாக உள்ளது. சில நேரங்களில் தலைவலியாகவும் உள்ளது.
மைசூரு நகரில் சாலை விதிகளை மீறுவோரை கண்டுபிடித்து, வழக்குப் பதிவு செய்ய அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை போக்குவரத்து போலீசார் பயன்படுத்துகின்றனர். இந்த கேமராக்களின் குளறுபடியால் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
சில இரு சக்கர வாகன ஓட்டிகள், தங்கள் முதுகில் பேக் தொங்க விட்டு பயணம் செய்கின்றனர். ஆனால் கேமராக்கள், பின் இருக்கையில் அமர்ந்த பயணி ஹெல்மெட் அணியவில்லை என, தவறாக அடையாளம் காட்டுகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி, அபராதம் செலுத்தும்படி உத்தரவிடுகின்றனர்.
வாகன ஓட்டிகளோ, 'நாங்கள் யாரையும் பின்னால் அமர்த்தி செல்லவே இல்லை. எங்களுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பினீர்கள்?' என, அங்கலாய்க்கின்றனர். போலீஸ் நிலையத்துக்கு அலைபாய்கின்றனர். போலீசாருக்கும் தர்மசங்கடம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, மைசூரின் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க, மைசூரில் 259 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கியமான சதுக்கங்கள், சாலைகள், ஜங்ஷன்களில் பொருத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து போலீசாரின் துணையின்றி, கேமராக்களே போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களை கண்டுபிடித்து, புகைப்படங்களுடன் பதிவு செய்கின்றன. இந்த கேமராக்கள் போலீசாருக்கு அதிக உதவியாக உள்ளன. போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களை, விரட்டி பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதே நேரத்தில் சில குழப்பங்களும் ஏற்படுகின்றன. சில வேளைகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் முதுகு பின்னால் உள்ள பையை, இன்னோரு பயணியாக கேமராக்கள் அடையாளம் காட்டுகின்றன. இதுகுறித்து கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாகன ஓட்டி பின்னால் இருப்பது பயணி அல்ல, பேக் என்பது தெரிந்தது. வாகன ஓட்டிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், எங்களின் கவனத்துக்கு கொண்டு வரலாம். நாங்கள் சரி செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***