ADDED : ஆக 10, 2025 01:40 AM

பாலக்காடு:பாலக்காடு அருகே ஆற்று நீரில் மூழ்கி, கோவையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் அருகே உள்ளது சோகநாசினி ஆறு. கோவை தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் படிக்கும், 10 மாணவர்கள், இந்த ஆற்று பகுதிக்கு நேற்று மதியம் வந்தனர்.
இதில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீகவுதம், 19, நெய்வேலியை சேர்ந்த அருண்குமார், 19, ஆகியோர் ஆற்றில் குளிக்க இறங்கினர். இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக்கண்டு மற்ற மாணவர்கள் சத்தம் போட்டதும், அப்பகுதி மக்கள் ஆற்றில் தேடுதலில் ஈடுபட்டனர்.
தடுப்பணை மதகில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகவுதமை காப்பாற்றி சித்துார் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீயணைப்பு படையினரும், போலீசாரும், மக்களின் உதவியுடன் மூன்று மணி நேர தேடுதலில் அருண்குமாரின் உடலையும் மீட்டனர்.