விபத்தில் ரயில் ஓட்டுநர் பலி பணி நிறைவு நாளில் சோகம்
விபத்தில் ரயில் ஓட்டுநர் பலி பணி நிறைவு நாளில் சோகம்
ADDED : ஏப் 03, 2025 07:11 AM
கொல்கட்டா : மேற்கு வங்கத்தை சேர்ந்த ரயில் ஓட்டுநர் ஒருவர், ஓய்வு பெற இருந்த நிலையில், பணியின் கடைசி நாளில் ரயில் இன்ஜின்கள் நடுவே சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
மேற்கு வங்கம் முர்ஜிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கங்கேஷ்வர் மால். மனைவி, மகன் மற்றும் மகளுடன் அவர் வசித்து வந்தார்.
லோகோ பைலட் என அழைக்கப்படும் ரயில் ஓட்டுநராக பணியாற்றிய கங்கேஷ்வர், கடந்த 1ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்தார்.
பணி நிறைவு நாளில், சரக்கு ரயில் ஒன்றை இயக்கிய அவர், ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் போக்னாதி ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக காத்திருந்தார்.
அப்போது, எதிர் முனையில் வந்த சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக கங்கேஷ்வர் இயக்கிய ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் கங்கேஷ்வர் உட்பட இருவர் பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல்மின் நிலையத்துக்கு சொந்தமான இருப்புப் பாதையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி நிறைவு நாளில், வீட்டுக்கு வருவதாக உறுதியளித்திருந்த நிலையில், இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்து காத்திருந்த அவரின் குடும்பத்தினருக்கு, கங்கேஷ்வரின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

