காத்திருந்த மர்ம பொருள்; கடைசி வினாடியில் எக்ஸ்பிரஸ் ரயில் 'எஸ்கேப்'
காத்திருந்த மர்ம பொருள்; கடைசி வினாடியில் எக்ஸ்பிரஸ் ரயில் 'எஸ்கேப்'
ADDED : செப் 09, 2024 12:09 PM

கான்பூர்; உ.பி.யில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் வைத்து எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் இருந்து ஹரியானா மாநிலம் பிவானி நகருக்கு கலண்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு உள்ளது. வழக்கம் போல் அசுர வேகத்தில் ரயில் சென்று கொண்டு இருக்க, சிவராஜ்புர் என்ற இடத்தை கடக்கும்போது அந்த பயங்கரம் நிகழ்ந்தது.
தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு மர்ம பொருள் இருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் டமால் என்ற சத்தத்துடன் என்ஜின் அதன் மீது மோதியது. ரயில் பெட்டிகள் கடுமையாக அதிர்ந்து போக, மர்ம பொருள் தண்டவாளத்தின் பக்கவாட்டில் தெறித்து விழுந்தது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். பின்னர் சம்பவம் குறித்து அவர் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ பகுதிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு நடத்திய போது நெளிந்து நசுங்கி, சேதம் அடைந்த நிலையில் கேஸ் சிலிண்டர் கிடப்பதை கண்டனர். மேலும், பை ஒன்றில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் அங்கிருந்து கைப்பற்றினர். பின்னர் 20 நிமிடங்கள் காலதாமதமாக எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. சம்பவத்தில் எந்த பயணிக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் யாரேனும் இந்த சதிவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.