ஸ்ரீரங்கபட்டணா தசரா விழா 'மகேந்திரா'வுக்கு பயிற்சி துவக்கம்
ஸ்ரீரங்கபட்டணா தசரா விழா 'மகேந்திரா'வுக்கு பயிற்சி துவக்கம்
ADDED : செப் 22, 2024 11:31 PM

மாண்டியா: ஸ்ரீரங்கபட்டணா தசராவில் பங்கேற்கும், 'மகேந்திரா' யானைக்கு, 550 கிலோ எடையுள்ள மரத்தில் செய்யப்பட்ட அம்பாரி சுமக்கும் பயிற்சி துவங்கியது.
மைசூரு தசரா போன்றே, மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணா தசராவும் விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு அக்., 4 முதல் 8ம் தேதி வரை நடக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மகேந்திரா யானை, அம்பாரியை சுமந்து வந்தது. நடப்பாண்டும் மத்திகோடு யானைகள் முகாமில் இருந்து வந்துள்ள மகேந்திரா யானை, மைசூரில் தினமும், 'அபிமன்யு' யானையுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்ரீரங்கபட்டணா தசராவில் பங்கேற்கும் மகேந்திரா யானைக்கு, நேற்று முதல் 550 கிலோ எடை உள்ள மரத்தில் செய்யப்பட்ட அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மகேந்திராவுடன், தனஞ்செயா, சுக்ரீவா, கோபி, பீமா ஆகிய யானைகளுக்கும் மர அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரண்மனையில் இருந்து புறப்பட்ட மகேந்திரா, கே.ஆர்., சதுக்கம், சாயாஜி ராவ் சாலை, ஆயுர்வேதிக் சதுக்கம் வழியாக பன்னி மண்டபம் சென்றடைந்தது.
வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறியதாவது:
அம்பாரியை சுமக்கும் யானைகளுக்கு படிப்படியாக மூன்று ஸ்டேஜ்களில் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறை, அம்பாரி சுமக்காமல் பயிற்சி; ௨வது முறை மணல் மூட்டைகள்; மூன்றாவது மரத்தில் செய்யப்பட்ட அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
மரத்தால் செய்யப்பட்ட அம்பாரியை சுமந்து, அபிமன்யு தனது பயிற்சியை முடித்து உள்ளது. அத்துடன் ஐந்து யானைகளுக்கும் இதே பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோன்று மகேந்திரா யானைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கபட்டணா தசராவில் எந்த யானை பங்கேற்கும் என்ற இறுதி பட்டியல் இரண்டு நாட்களில் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.