ADDED : ஆக 08, 2025 11:25 PM

பாலக்காடு:பாலக்காடு அருகே, பார்வை குறைபாடுள்ள ஆண் காட்டு யானைக்கு, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா, கஞ்சிக்கோடு, வாளையார் ஆகிய வன எல்லையோர குடியிருப்பு பகுதிகளில், ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. வயல்களில் புகுந்து பயிரை சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானையை, வனத்தினுள் விரட்டினாலும், மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு திரும்பி வந்தது.
இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய பரிசோதனையில், 32 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் காட்டு யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது தெரிந்தது. அதனால், யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவெடுத்தனர்.
நேற்று காலை, மலம்புழா மாந்துருத்தி பகுதியில், வனத்துறையின் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் ஸக்கரியா தலைமையிலான மருத்துவக் குழு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கண்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அதன்பின், யானைக்கு 'ரேடியோ காலர்' பொருத்தி, வயநாட்டில் இருந்து அழைத்து வந்த பரதன், விக்ரம் ஆகிய கும்கி யானைகளின் உதவியுடன், காட்டு யானையை அடர்ந்த வனத்தில் விட்டனர்.
இதுகுறித்து, கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் ஸக்கரியா கூறியதாவது:
காலை, 8:00 மணிக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கினோம். சுமார், 100 வனத்துறை ஊழியர்கள், 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சையளிக்க களம் இறங்கினோம்.
மயக்க ஊசி செலுத்திய பின், யானையின் கண் பார்வையை மீண்டெடுப்பதற்கான சிகிச்சை அளித்துள்ளோம். யானையின் நகர்வை கண்காணிக்க, 'ரேடியோ காலர்' பொருத்தி அடர்ந்த வனத்தில் விடப்பட்டது. யானையை இரு வாரம் கண்காணித்த பின், தொடர் சிகிச்சை குறித்து ஆலோசனை செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.