கோபத்தில் உள்ள ஈஸ்வரப்பாவை சமாதானம் செய்யும் மும்மூர்த்திகள்
கோபத்தில் உள்ள ஈஸ்வரப்பாவை சமாதானம் செய்யும் மும்மூர்த்திகள்
ADDED : மார் 18, 2024 05:20 AM

மகனுக்கு 'சீட்' கிடைக்காததால், கொதிப்படைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை சமாதானம் செய்யும் முயற்சியில், பா.ஜ.,வின் மும்மூர்த்திகள் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், ஷிவமொகா தொகுதியில் பா.ஜ., சீட் நழுவ விட்ட ஈஸ்வரப்பா, லோக்சபா தேர்தலில் 'கண்' வைத்திருந்தார். வயது காரணமாக தனக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்பதை உணர்ந்து, தன் மகன் காந்தேஷுக்கு, ஹாவேரி தொகுதியில் சீட் கேட்டார்.
ஆனால் இந்த தொகுதியில், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை, பா.ஜ., மேலிடம் வேட்பாளராக்கியது.
எடியூரப்பாவே காரணம்
கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஈஸ்வரப்பா, தன் மகனுக்கு சீட் கிடைக்காததற்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவே காரணமென, குற்றம் சாட்டினார். இவருக்கு பதிலடி கொடுக்க, ஷிவமொகா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவுக்கு எதிராக, சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவதாக சவால் விடுத்துள்ளார்.
அதிருப்தி கொடியை பறக்க விட்டுள்ள ஈஸ்வரப்பாவை, சமாதானம் செய்யும் முயற்சி நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கலபுரகிக்கு வருகை தந்ததால், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும், நேற்று கலபுரகி வந்தனர். பிரதமரின் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மாலை அங்கிருந்து ஹூப்பள்ளிக்கு வந்தனர்.
ஹூப்பள்ளி விமான நிலையத்தில், மூவரும் ஆலோசனை நடத்தினர். ஈஸ்வரப்பாவை சமாதானம் செய்வது குறித்து, பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். அப்போது எம்.எல்.சி., ரவிகுமாரும் உடனிருந்தார்.
அதிருப்தி சரியாகும்
அதன்பின் எடியூரப்பா கூறியதாவது:
லோக்சபா தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளது. கர்நாடகாவில், 25 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நாடு முழுதும் பா.ஜ., அலை வீசுகிறது. இன்று முதல், மாநில சுற்றுப்பயணம் துவங்குகிறது. மோடியின் உத்தரவுப்படி செயல்படுவோம். இன்னும் ஒரு வாரத்தில், கட்சியில் உள்ள அதிருப்தி சரியாகும். ஈஸ்வரப்பா உட்பட, அதிருப்தி தலைவர்களை சமாதானம் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

