மேற்கு வங்கத்தில் ஆதாரை முடக்கி கண்ணுக்கு தெரியாத மோசடி : திரிணமுல் காங்கிரஸ் புகார்
மேற்கு வங்கத்தில் ஆதாரை முடக்கி கண்ணுக்கு தெரியாத மோசடி : திரிணமுல் காங்கிரஸ் புகார்
ADDED : நவ 13, 2025 09:54 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கும் நிலையில், 34 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக யுஐடிஏஐ கூறியுள்ளதாகவும், இதன் மூலம் அமைதியான முறையில் கண்ணுக்கு தெரியாத மோசடி அரங்கேறி வருகிறது என திரிணமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில், இந்தப் பணியை மேற்கொள்வதற்கு அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருப் சக்கரவர்த்தி கூறியதாவது: மாநில தேர்தல் அதிகாரியிடம், யுஐடிஏஐ அமைப்பு 32 -34 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், முடக்கப்பட்ட ஆதார் எண்களை ஆண்டு வாரியாகவும், மாநில வாரியாகவும் சேமித்துவைக்கவில்லை என முன்பு பார்லிமென்ட் குழுவிடம் தெரிவித்து இருந்தது. அப்படி இருக்கையில், அந்த தகவலை எப்படி மாநில தேர்தல் அதிகாரியிடமும், தேர்தல் கமிஷனிடமும் அந்த அமைப்பு கொடுத்துள்ளது. இந்த முறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தால், நாங்கள் நீதிமன்றத்திலும், தெருக்களிலும் போராட வேண்டிய நிலை ஏற்படும். மேற்கு வங்க வாக்காளர்களை, பாஜ மாயமாக்க செய்வதை அனுமதிக்க முடியாது. மாநிலத்தில் கண்ணுக்கு தெரியாத மோசடி நடக்கிறது. இது குறித்து தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்வோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கமிஷன்அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் அறிமுகமான 2009ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை 34 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. அதேபோல், 12 லட்சம் பேர் ஆதார் பதிவு செய்யவில்லை எனவும், தற்போது அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

