'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம் திரிணமுல் காங்., புறக்கணிப்பு
'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டம் திரிணமுல் காங்., புறக்கணிப்பு
ADDED : டிச 02, 2024 11:08 PM

புதுடில்லி : அதானி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி பார்லிமென்ட் நடவடிக்கைகளை முடக்குவதில் உடன்பாடு இல்லாததால், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடந்த 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தை திரிணமுல் காங்., புறக்கணித்தது.
'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வலியுறுத்தி, பார்லிமென்ட்டில் இண்டி கூட்டணியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து இரு சபைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் எதுவும் நடக்காமலேயே சபைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
'பார்லிமென்ட் கூட்டத்தொடரில் மேற்கு வங்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்' என, திரிணமுல் காங்., பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
ஆனால், அதானி விவகாரத்தை வைத்து இண்டி கூட்டணியினர் சபை நடவடிக்கைகளை முடக்குவதில், திரிணமுல் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில், இண்டி கூட்டணி எம்.பி.,க்களுக்கான கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில், திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
நேற்றைய பார்லி., கூட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், நிதி பற்றாக்குறை, மணிப்பூர் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப் பட்டிருந்தது.
ஆனால், அதானி விவகாரத்தை மட்டுமே காங்., முன்னிலைப்படுத்துவதால் இண்டி கூட்டணி கூட்டத்தை தவிர்த்ததாக திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.