அமெரிக்க வரியால் பாதிப்பு; வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
அமெரிக்க வரியால் பாதிப்பு; வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஆக 16, 2025 12:57 PM

சென்னை: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்.
தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்னை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
தமிழக ஜவுளித்துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.