இந்தியா - கனடா உறவு விரிசலுக்கு ட்ரூடோ... முழு பொறுப்பு!
இந்தியா - கனடா உறவு விரிசலுக்கு ட்ரூடோ... முழு பொறுப்பு!
ADDED : அக் 18, 2024 01:36 AM

'
புதுடில்லி, உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், இந்தியா மீது குற்றம் சுமத்தியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருப்பதை தான் நாங்களும் பல மாதங்களாக கூறி வருகிறோம். அது தொடர்பாக ஆதாரம் எதையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு கனடா பிரதமர் தான் முழு பொறுப்பு' என, நம் வெளியுறவுத்துறை பகிரங்க பதிலடி தந்துள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி, காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடாவில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கை மீண்டும் கையில் எடுத்த கனடா பிரதமர் ட்ரூடோ, கனடா தேர்தல் மற்றும் ஜனநாயகத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருப்பதாக இந்தியா மீது குற்றஞ்சாட்டினார்.
இதை தொடர்ந்து, டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் ஆறு பேரை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. இந்த விவகாரம் முடிவுக்கு வரும் வரை, கனடாவுக்கான இந்திய துாதரை திரும்பப் பெற்றது.
கனடா தேர்தலில் மூன்றாம் நாடுகளின் தலையீடு இருப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து, கனடாவின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான கமிஷன் முன் ஆஜராகி பிரதமர் ட்ரூடோ விளக்கம் அளித்தார்.
அப்போது, நிஜ்ஜார் கொலை வழக்கில், உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையிலேயே இந்தியா மீது குற்றஞ்சாட்டியதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
வெளிநாட்டு தலையீடு கமிஷன் முன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருப்பதை தான் நாங்கள் பல மாதங்களாக கூறி வருகிறோம். நாங்கள் தொடர்ச்சியாக கூறி வரும் கருத்தை தான் ட்ரூடோவின் பேச்சு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கு எதிராக கனடா வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு, அந்நாட்டு அரசு எந்த ஆதாரத்தையும் எங்களிடம் அளிக்கவில்லை.
ட்ரூடோ அரசின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் இந்தியா - கனடா உறவு இன்றைக்கு சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமைக்கு பிரதமர் ட்ரூடோ தான் முழு பொறுப்பு.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதி திடுக் தகவல்
'சீக்கியர்களுக்கான நீதி' என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் குர்ப்த்வந்த் சிங் பன்னுன், கனடா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'எங்கள் அமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக கனடா பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறது. இந்திய துாதரக அதிகாரிகளின் உளவு பணி குறித்து நான்தான், அவர்களுக்கு தகவல் அளித்தேன்' என, குறிப்பிட்டுள்ளார்.